முதல் போட்டியில் பெடரருக்கு வெற்றி

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது

இந்த ஆண்டுக்கான உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

வருகிற 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கு நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே மற்றும் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் தகுதி பெற முடியவில்லை.

சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தகுதி பெற்ற போதிலும் காயத்தால் விலகினார்.

இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்க நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 9-ம் நிலை வீரர் ஜாக் சோக்கை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

1 மணி நேரம் 31 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜாக் சோக்கை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார்.

 

0
Shares