டில்லியில் அஷ்வின் திருப்பு முனை * 3 விக்கெட் வீழ்த்தி அபாரம்

புதுடில்லி: டில்லி டெஸ்டில் பவுலிங்கில் திணறிய இந்திய அணிக்கு ‘விடிவெள்ளியாக’ வந்தார் அஷ்வின். இவர் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தி கைகொடுக்க, இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1–0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. மாத்யூஸ் (57), கேப்டன் சண்டிமால் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மாத்யூஸ் நம்பிக்கை

நேற்று, மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கையின் மாத்யூஸ், கேப்டன் சண்டிமால் ஜோடி, இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து, ரன் சேர்த்தது. ரோகித் சர்மா ‘கேட்ச்’ வாய்ப்பை நழுவவிட்டதால், 98 ரன்னில் கண்டம் தப்பிய மாத்யூஸ், இஷாந்த் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தனது 8 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்த சண்டிமால், ஷமி வீசிய 83வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். இவர்களை பிரிக்க இந்திய பவுலர்கள் எடுத்த முயற்சிக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. நேற்று மட்டும் இவர்கள் இருவரும் இணைந்து 53 ஓவர்கள் ‘பேட்டிங்’ செய்தனர்.

இந்நிலையில், இந்திய அணிக்கு விடிவெள்ளியாக வந்தார் அஷ்வின். இவரது ‘சுழலில்’ மாத்யூஸ் (111) சிக்க, இந்திய அணியினருக்கு நிம்மதி பிறந்தது.

சண்டிமால் சதம்

அடுத்து வந்த சமரவிக்ரமா, ஜடேஜா வீசிய 103வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். கேப்டன் சண்டிமால், டெஸ்ட் அரங்கில் 10வது சதமடித்தார். தொடர்ந்து அசத்திய சண்டிமால், ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு விரட்ட, இலங்கை அணி 300 ரன்களை எட்டியது. இஷாந்த் பந்தில், விக்கெட் கீப்பர் விரிதிமன் சகாவின் துடிப்பான ‘கேட்ச்’ மூலம் சமரவிக்ரமா (33) அவுட்டானார்.

அஷ்வின் அபாரம்:

அடுத்து வந்த ரோஷன் சில்வா (0), டிக்வெல்லா (0) இருவரும் அஷ்வினிடம் சரணடைந்தனர். ஷமி ‘வேகத்தில்’ லக்மல் (5) வெளியேறினார். பின், ஜடேஜா ‘சுழலில்’ கமாகே (1) சிக்கினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. சண்டிமால் (147), சண்டகன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின் 3, ஷமி, இஷாந்த், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. தற்போது 180 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இலங்கை அணியின் ஒரு விக்கெட்டை விரைவாக வீழ்த்தி, இரண்டாவது இன்னிங்சில் வேகமாக ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

 

‘பீல்டிங்’ ஏமாற்றம்

டில்லி டெஸ்டில், இந்திய அணியின் ‘பீல்டிங்’ ஏமாற்றம் அளிக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ‘சிலிப்’ பகுதியில் ‘பீல்டிங்’ செய்த ஷிகர் தவான், கேப்டன் கோஹ்லி, தலா ஒரு ‘கேட்ச்’ வாய்ப்பை நழுவவிட்டனர். நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், இஷாந்த் வீசிய 82வது ஓவரின் முதல் பந்தில் 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கையின் மாத்யூஸ் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை ‘சிலிப்’ பகுதியில் நின்றிருந்த ரோகித் சர்மா நழுவவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மாத்யூஸ், 111 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.

இதேபோல, ஜடேஜா வீசிய 89வது ஓவரின் 5வது பந்தில், 104 ரன்கள் எடுத்திருந்த மாத்யூஸ் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை ‘மிட்–ஆப்’ பகுதியில் மாற்று வீரராக ‘பீல்டிங்’ செய்த தமிழகத்தின் விஜய் சங்கர், வீணடித்தார்.

புகார் இல்லை

இரண்டாம் நாள் ஆட்டத்தில் காற்று மாசுபாடு காரணமாக, ‘பீல்டிங்’, ‘பவுலிங்’ செய்ய முடியவில்லை என இலங்கை அணியினர் அடிக்கடி புகார் தெரிவித்து, போட்டியை தாமதப்படுத்தினர். ஆனால் நேற்று முழுவதும் ‘பேட்டிங்’ செய்த இலங்கை அணியினர் ஒரு முறை கூட இதுகுறித்து எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை.

111

பேட்டிங்கில் அசத்திய இலங்கையின் மாத்யூஸ், 111 ரன்கள் (2 சிக்சர், 14 பவுண்டரி, 268 பந்து) எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், கடந்த 2015ல் கொழும்புவில் நடந்த டெஸ்டில் 110 ரன்கள் எடுத்திருந்தது, இந்தியாவுக்கு எதிராக இவரது சிறந்த ரன்னாக இருந்தது.

* இதுவரை 8 சதமடித்துள்ள மாத்யூஸ், இந்தியாவுக்கு எதிராக 3வது சதத்தை பெற்றார். தவிர இவர், இந்திய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

476

கடந்த 2010, நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, காலிஸ் இணைந்து 641 பந்துகளை சந்தித்தனர். இதன் பின், இந்திய மண்ணில் டில்லி டெஸ்டில் மாத்யூஸ், சண்டிமால் இணைந்து, அதிகபட்சம் 476 பந்துகள் சந்தித்து விளையாடினர்.

அன்னியமண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் (வெலிங்டன், 2014), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், வாட்லிங் ஜோடி, 738 பந்துகளை சந்தித்தது.

டில்லி டெஸ்ட் இரண்டாவது நாளில் காற்று மாசுபாடு என, காரணம் கூறி, பவுலிங், பீல்டிங் செய்ய மறுத்தனர் இலங்கை வீரர்கள். பின் இந்திய அணி ‘டிக்ளேர்’ செய்ய, இலங்கை வீரர்கள் வழக்கம் போல பேட்டிங் செய்தனர். களத்தில் நின்ற போது முகமூடி அணிந்தனர்.  இவர்கள், களத்தை விட்டு வெ ளியேறிய சில நிமிடத்தில் காற்று மாசுபாடு போய்விட்டது போல. முகமூடி இல்லாமல் அமர்ந்து இருந்தனர். நேற்று நாள் முழுவதும் பேட்டிங் செய்த போதும், இவர்களுக்கு எவ்வித தொல்லையும் இல்லை.

0
Shares