ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தொடர்ந்தும் நிலவி வரும் மாற்றங்கள்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையிலேயே ஊரடங்கு சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டது.

இதுதொடர்பில் ஜனாதிபதியினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இன்று மாலை 6 மணிக்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச ஊழியர்கள் பொலிஸ் அதிகாரிகள் முப்படையினர் தவிர்ந்த ஏனையவர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீதியில் புகையிரத நிலையங்கள் பூங்காக்கள் களியாட்ட இடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் குறித்த பிரிவினருக்கு அறிவித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதியை எழுத்துமூலம் பெறவேண்டும் என பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊரடங்குச் சட்டத்தை மீறுதல் அவசர நிலைமை சட்டத்திற்கேற்ப தண்டனை வழங்க முடியுமான குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு சுமூகமான நிலைமை பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கண்டி வரை வழமைப் போல புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கண்டி ஊடாக முன்னெடுக்கப்படும் நெடுந்தூர பேருந்து சேவைகளை பொலிஸ் பாதுகாப்புடன் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஜீ.எச்.ஆர்.பீ. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கொழும்பு – பிபிலை கொழும்பு – வலப்பனை கொழும்பு – மஹியங்கனை கொழும்பு – மட்டக்களப்பு கொழும்பு – அம்பாறை ஆகிய நெடுந்தூர சேவை பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனை தவிர கண்டி வத்தேகம மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளிலிலிருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

0
Shares