கடற்பிரதேசங்களில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை தாழமுக்கமாக வலுவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டுள்ள தளம்பல் நிலை, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்காரணமாக நாட்டின் மேல், தென், தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு அந்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.

பலத்த மழை காரணமாக மட்டக்களப்பு ஆஞ்சனேயபுரம் மற்றும் முராவோடை தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆஞ்சனேயபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

முராவோடை தமிழ் கிராம சேவையாளர் பிரிவில் 2 குடும்பங்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக முராவோடை கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

0
Shares