ஃபேஸ்புக்கில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு – மார்க் சக்கர்பர்க்

சில தினங்களுக்கு முன் 87 மில்லியன் முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க்கிடம் அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மார்க் சக்கர்பர்க் அமெரிக்க செனட்டர்களிடம் பதிலளித்தார். இந்த விசாரணையில் ஒவ்வொரு செனட்டர்களுக்கும் கேள்வி எழுப்புவதற்கு தலா 4 முதல் 5 நிமிடம் வழங்கப்பட்டது.

தற்போது தங்கள் நிறுவனம் போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்தார் மார்க். சமூக ஊடகம் எவ்வாறு தீவிரமாக கண்காணிக்கப்படலாம் என அமெரிக்க செனட்டர்கள் மார்க் சக்கர்பர்கிடம் கேள்விகளை கேட்டனர். கேள்வி பதில் நேரத்தில் மார்க் சக்கர்பர்க் இந்திய தேர்தல் குறித்தும் விளக்கமளித்தார்.

அமெரிக்க தேர்தல் எந்தவித அழுத்தங்களாலும், பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்ய அவர் என்ன
செய்ய போகிறார் என்று செனட்டர் ஃபின்ஸ்டின் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மார்க், 2018ஆம் ஆண்டில் இந்த விவகாரத்தில் அதிகம் கவனம் செலுத்த போவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் மட்டுமல்லாமல், மேலும் பல நாடுகளில் தேர்தல் நடக்கவிருப்பதால் 2018ஆம் ஆண்டு மிக முக்கியமானது என மார்க் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், ஐங்கேரி, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடம் என்றும், இந்த நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் தங்கள் தரத்தை இழக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றும் மார்க் சக்கர்பர்க் தெரிவித்தார்.

மேலும், வன்முறைகளை தூண்டும் செய்திகளை தடுப்பது, போலி கணக்குகளை கண்டறியும் நடவடிக்கை ஆகியவற்றை நாங்கள் மேற்கொள்வோம் என அவர் தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் முன்னதாக ஒப்பு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணையில் ஒவ்வொரு செனட்டர்களுக்கம் கேள்வி எழுப்புவதற்கு 5 நிமிடத்திற்கும் குறைவான நேரமே வழங்கப்பட்டது எனவும் ஆகையால் இந்த விசாராணையில் போதுமான அளவு உண்மைகள் வெளிவரவில்லை என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகிறது.

மேலும், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் 1998 -ம் ஆண்டு கேஃபாவெர் ஹியரிங்ஸ் குழுவை சந்தித்தபோது இருந்த அளவிற்கான அழுத்தம் இந்த விசாரணையில் இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

“நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது” என தனது முகநூல் பதவில் தெரிவித்திருந்தார் மார்க் சக்கர்பர்க். “ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு” என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
Shares