merry christmas

happy

நிலநடுக்கம் ஏற்படும் முன்பே எச்சரிக்கும் மொபைல் ஆப்… எப்படிச் செயல்படுகிறது?

வழக்கமான ஒரு நாளாகத்தான் அது விடிகிறது. குழந்தைகள் அரைத் தூக்கத்தில் இருந்து விடுபட மறுக்கின்றனர். அம்மாக்கள் பரபரப்புடன் வேலை பார்க்கின்றனர். அதைப் பொருட்படுத்தாமல் குடும்பத் தலைவர்கள் வீட்டின் வெளியே அமர்ந்து செய்தித் தாள்களை புரட்டிக் கொண்டு ஸ்ட்ராங்கான காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தனர்.

புதியதோர் சூரிய ஒளி அந்த நகர்ப்புறத்தின் மேல் போர்வை போல விரிய, எல்லோரும் அதை வரவேற்கத் தயாராகத்தான் இருந்தனர். ஆனால், நாய்களுக்கு ஏனோ அந்த விடியல் பிடிக்கவில்லை. விடாமல் ஒரு திசை உற்று நோக்கியவாறு குலைக்கத் தொடங்கின. பறவைகள் கூட்டமாக அந்த நகரத்தையே காலி செய்வதுபோல இடம்பெயரத் தொடங்கின. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த கால்நடைகள்கூட விடாமல் ஒலி எழுப்பின.

என்னவென்றே புரியாத இந்தக் குழப்பமான தருணத்தில் ஒரு சில மொபைல் போன்களில் செய்திகள் வந்து விழுந்தன. அலாரம் போன்ற ஒலி காதை பிளந்தது. எடுத்துப் பார்த்தால் இன்னும் அறுபது வினாடிகளில் நிலநடுக்கம் இங்கே நிகழப் போவதாக தகவல். சட்டெனக் குழந்தைகளுடன் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று பதுங்குகின்றனர். இந்தக் கடைசி நேர மொபைல் எச்சரிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இது கதையல்ல. கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சிதான் சமீபத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.

That was the first earthquake I’ve felt since I got access to the @EarlyWarningLab beta app. I had 34 seconds warning—enough time to drop, cover, and hold on, which I would have done if I knew shaking was going to be strong. pic.twitter.com/Bx4Sn2imUW

— Alissa Walker (@awalkerinLA) April 5, 2018

ஏப்ரல் 5-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தை நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆகப் பதிவான அது கலிஃபோர்னியாவில் 61 கி.மீ.க்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பூமி அதிர்ந்து அடங்கிய சில நிமிடங்களிலேயே ட்விட்டர் தளத்தில் தெற்கு கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மக்கள் வரிசையாக ஒரு சில ட்வீட்களைப் பதிவு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட மொபைல் ஆப், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னதாகவே தங்களுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பியதாகவும், அதனால்தான் தங்களுக்குப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல போதிய அவகாசம் கிடைத்ததாகவும் பதிவிட்டிருந்தனர்.

Quake Alert என்று அழைக்கப்படும் அந்த ஆப், இத்தனைக்கும் beta வெர்ஷனாகதான் செயல்பட்டு வந்தது. அதுவே பலருக்கு உதவியிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 30-லிருந்து 60 வினாடிக்குள் இதனால் அதை மோப்பம் பிடித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்ப முடியும். அந்தக் குறுகிய இடைவெளியில் மக்கள் ஒரு அளவுக்காவது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட முடியும்.

இந்த ஆப் எப்படி நிலநடுக்கத்தை கண்டறிகிறது?

எர்லி வார்னிங் லேப்ஸ் (Early Warning Labs) என்ற நிறுவனம் இந்த மொபைல் ஆப்பை வடிவமைத்துள்ளது. சீஸ்மிக் (Seismic) சென்சார்கள் கொண்டு நில அதிர்வுகளை முன்னரே கண்டறிந்து, ஆப்பை இன்ஸ்டால் செய்த அனைவருக்கும் தகவல்களை அனுப்புகிறது. இந்த சென்சார்கள் எந்த இடத்தில் எப்போது நிலநடுக்கம் ஏற்படும், ரிக்டர் அளவுகோலில் அது எந்த அளவுக்கு இருக்கும் என்பது வரை கணித்துக் கூறி விடுகிறது.

பொதுவாக, நிலநடுக்கம் ஏற்படும்போது இரண்டு வகை அலைகள் வெளியேற்றப்படும். முதலில் நீள்வெட்டாக பயணிக்கும் அழுத்த அலைகள் (Pressure Waves) வெளியேறும். அது வெளியேறிய சில நொடிகளிலேயே சக்தி வாய்ந்த வெட்டு அலைகள் (Shear Waves) தாக்கும். இதுதான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். சேதமடையச் செய்யும்.

இந்த இரண்டு அலைகளுக்கும் குறைந்த பட்சம் ஒரு நிமிட இடைவெளி இருக்கும். முதல் அழுத்த அலைகள் வந்தவுடனேயே இந்த வார்னிங் மெசேஜ்கள் மக்களுக்குச் சென்றடைவதால், அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான நேரம் கிடைக்கும். இந்த ஆப் மாநில பொது அவசரநிலை பாதுகாப்பு அதிகாரிகள், உள்கட்டமைப்பு (எரிவாயு இணைப்புகள், சுரங்கப்பாதை அமைப்புகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவை), தனியார் நிறுவனங்கள் போன்றவற்றுக்குத் தகவல்களை அனுப்பி விடுகிறது.

ஜப்பான், தைவான், மெக்ஸிகோ போன்ற ஒரு சில நாடுகளில், இத்தகைய முன்னெச்சரிக்கை செய்திகளை அனுப்பும் தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு விட்டன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மெக்ஸிகோவில் 8.1 என்ற அளவுக்கு நிலநடுக்கம் பதிவானபோது மக்கள் தங்களை காத்துக்கொள்ள 60 நொடிகள் இடைவெளி கிடைத்தது. இது மிகவும் குறைவான இடைவெளிதான் என்றாலும், முடிந்தளவு உயிர்களையாவது காத்துக்கொள்ள இது உதவும்.

இந்த ஆப் மட்டுமல்ல, இதேபோல நிறைய ஆப்கள் கூகுள் ப்ளேஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. இது அலைகளை ஆராய்வதைப்போல வேறு சில ஆப்கள் நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள முடுக்க அளவியை (accelerometer) கொண்டு நிலநடுக்கம் குறித்த தகவல்களை முன்னரே தெரிந்துகொண்டு நம்மை எச்சரிக்கின்றன. இவற்றில் நம்பகமானவற்றைக் கண்டறிந்து பயன்படுத்தினால் நிலநடுக்கம் ஏற்படுத்தும் சேதங்களில் இருந்து ஓரளவிற்கேனும் தப்பிக்கலாம்.

0
Shares