உலக டென்னிஸ் தரவரிசை வெளியீடு!

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

உலக டென்னிஸ் வீர, வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,950 புள்ளிகள்) மாட்ரிட் ஓபன் போட்டியில் கால் இறுதியில் வெளியேறியதால் ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 12-வது இடத்தில் இருந்து 18-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு ஜோகோவிச் முதல் 15 இடத்துக்கு வெளியே தள்ளப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (7,270 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,845 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,175 புள்ளிகள்) 3-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (5,505 புள்ளிகள்) 4-வது இடத்திலும் தொடருகின்றனர். செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா 2 இடம் முன்னேறி 8-வது இடத்தையும், மாட்ரிட் ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 5 இடம் முன்னேறி 15-வது இடத்தையும், ரஷிய வீராங்கனை ஷரபோவா 12 இடங்கள் ஏற்றம் கண்டு 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 

0
Shares