வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கை

அணுவாயுத திட்டங்களை முழுமையாக நிறுத்த கோரினால் பேச்சுவார்த்தையை இரத்து செய்ய நேரிடும் என வடகொரியா, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிகக் பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் சுமுகமான உறவை ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கிடையிலான சந்திப்பொன்றுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெறும் என உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து இராணுவ ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை வடகொரியாவை ஆத்திரமடையச்செய்துள்ளது.

இந்த செயற்பாடானது வடகொரியாவிற்கு எதிராக முன்னெடுக்கவிருக்கும் படையெடுப்பிற்கான அறிகுறி என வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக தென் கொரியாவுடன் இன்று இடம்பெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்றை வடகொரியா இரத்து செய்துள்ளது.

இதேவேளை, அணுவாயுத செயற்பாட்டை முழுமையாக நிறுத்துவதாக வடகொரியா உறுதியளித்ததை தொடர்ந்தே அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares