வானிலை குறித்து மக்களுக்கான எச்சரிக்கை

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அது குறித்து அறிவிக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் இன்று முதல் 10 நாட்களுக்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

அத்துடன், அதிகரித்து வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தயாராகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் கடும் மழை பெய்யககூடும் என எதிர்ப்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவு மழை பெய்யக்கூடும் என, அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையும், கடும் காற்று வீசக்கூடும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100மி.மீ மழை பதிவாகக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு வரையான கடற்கரையோர பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இந்நிலையில், இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

0
Shares