May 22, 2018
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்ள் ஆகிய இருவரின் திருமணம் முழு உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று. அதிலும் மேகனின் திருமண ஆடை எப்படி இருக்கப் போகின்றது என்பதை எல்லோருமே எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
எல்லோரும் எதிர்பார்த்த வண்ணமே மிகவும் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் அந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்ததை நாம் எல்லோருமே கண்டு களித்தோம்.
பிரித்தானிய அரச குடும்பத்தைப் பொறுத்தவரை திருமண நாள் வரும் வரையிலும் மணமகளின் ஆடையை யாரும் பார்க்க முடியாது. திருமண நாளில் தான் அதை பார்க்க முடியும்.
இளவரசி மேகனின் ஆடையை வடிவமைத்தவர் பிரித்தானியாவை சேர்ந்த 43 வயதுடைய Clare Waight Keller என்னும் ஆடை வடிவமைப்பாளராவார்.
மேகன் தலையில் அணியப்பட்டிருந்த முக்காடானது (Veil) சுமார் 16 அடி நீளம் கொண்டது.
அந்த முக்காட்டின் ஓரங்களில் எம்ப்ராய்டிங் செய்யப்பட்டிருந்த பூக்களின் எண்ணிக்கை 53. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளையும் பிரதிபலிக்கும் முகமாக இந்தப் பூக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
மேகன் திருமணத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் இளவரசர் ஹரியுடன் வேல்சுக்கு விஜயம் செய்தபோது இதே போன்றதொரு ஆடையை அவர் அணிந்திருந்தார்.
மேகன் தலையில் அணிந்திருந்த வைரக்கிரீடம் 1932 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட மிகப்பழமை வாய்ந்தது. இந்தக் கிரீடமானது இரண்டாம் எலிசபெத் மகாராணியாரல் மகாராணி மேரிக்கு கொடுக்கப்பட்டது.
Voice of Asia Network (Pvt) Ltd
© 2017 Varnam FM. All Rights Reserved