AI கேமரா, செல்ஃபி ஸ்பெஷல்… பட்ஜெட் விலையில் ஷியோமியின் புதிய ஸ்மார்ட்போன்! #RedmiY2

கடந்த வருடம் செல்ஃபியை மையமாக வைத்து ஷியோமி நிறுவனம் ரெட்மி Y1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற அதன் அடுத்த வெர்ஷனை இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மொபைலின் அறிமுக நிகழ்வை ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் தொகுத்து வழங்கினார்.

ஸ்மார்ட்போன் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்திருப்பதுடன் இந்தியாவில் விற்பனையாகும் 3 போன்களில் ஒன்று ஷியோமி நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.

இந்த வருட தொடக்கத்தில் இருந்த காலாண்டு வரையில் இணையதளத்தில் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் முதல் பத்து இடங்களில் ஒன்பது இடங்களை ஷியோமி ஸ்மார்ட்போன்கள்தாம் கைப்பற்றியிருக்கின்றன. நேற்று (ஜூன் 7) அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Y2 என்ற இந்த ஸ்மார்ட்போனும் சந்தையில் வரவேற்பைப் பெரும் என நம்புகிறது ஷியோமி.

முந்தைய ஸ்மார்ட்போனில் இருந்த பல வசதிகள் அப்டேட் ஆகியிருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது கேமரா. இதன் முந்தைய வெர்ஷனான ரெட்மி Y1 ஸ்மார்ட்போன் செல்ஃபி ஸ்பெஷலாக இருந்ததால் முன்புற கேமராவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. ஆனால், இந்த முறை பின்புற கேமராவின் பக்கமும் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறது. 16MP முன்புற கேமரா ஃப்ளாஷ் வசதியுடன் இருக்கிறது. இதன் 79.8° வைடு ஆங்கிள் லென்ஸ் மூலமாக அதிக பரப்பை கவர் செய்ய முடியும்.

பின்புறமோ 12MP+5MP டூயல் கேமராக்களைக் கொடுத்து அசத்தியிருக்கிறது. AI தொழில்நுட்பத்தின் மூலமாக Redmi Y2-வில் எடுக்கப்படும் போட்டோக்கள் மிகத் துல்லியமாக இருக்கும் எனக் கூறுகிறது ஷியோமி. அதிலும் குறிப்பாக portrait mode-களில் எடுக்கப்படும் போட்டோக்களில் உருவ அமைப்புக்குத் தகுந்தவாறு AI தொழில்நுட்பம் செயல்படும் எனவும் கூறுகிறது.

5.99 (720×1440) இன்ச் 18:9 டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. கேமராவில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதன் தோற்றத்திலும், கட்டமைப்பிலும் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி இந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்திருக்கிறது ஷியோமி. பின்புறம் பிளாஸ்டிக் பேனலாக இருந்தாலும் மெட்டாலிக் பினிஷ் கொடுத்திருப்பதால் பிரீமியம் லுக்கைத் தருகிறது.

மற்றபடி வழக்கமான ஷியோமியின் ஸ்டைலில் மொபைல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இருந்தாலும் கூடுதலாக பேஸ் அன்லாக் வசதியும் இதில் இருக்கிறது.

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட Qualcomm Snapdragon 625 ப்ராஸசரை அவ்வளவு சீக்கிரம் கைவிடும் முடிவில் ஷியோமி இல்லை என்பது இந்த ஸ்மார்ட்போன் மூலமாகத் தெரிகிறது. சிறந்த செயல்திறனைக் கொண்ட ப்ராஸசர் என்பதால் அதன் பிறகு வெளியான பல ஸ்மார்ட்போன்களிலும் அதைப் பயன்படுத்தியது. இதிலும் Snapdragon 625தான் இருக்கிறது.

3080 mAh பேட்டரி இருந்தாலும் ஒரு நாளைக்கு மேல் பயன்படுத்த தேவையான திறனை அளிக்கும் எனக் கூறும் ஷியோமி இதற்கு 30 நாள்கள் ஸ்டான்ட்பை டைம் எனக் கூறுகிறது. சிம் ஸ்லாட்டில் இரண்டு சிம் மற்றும் ஒரு மெமரி கார்டை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.

MIUI 9.5 ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இதில் இருக்கிறது. 3GB+32GB வேரியன்ட் 9,999 ரூபாய், மற்றும் 4GB+64GB வேரியன்ட் 12,999 ரூபாய். கிரே, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

0
Shares