எதிர்வரும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க இவர்களுக்கு தடைவிதிக்கப்படுமா?

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியின் போது, இலங்கை அணி இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்து போட்டியை ஆரம்பித்தமை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீர்ப்பு நேற்று அறிவிக்கவுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த விசாரணை அறிவிப்பு இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எஷ்லி டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்க அணிக்கெதிராக நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் இந்த அறிவிப்பை விடுக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துறுசிங்க, மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எதிராகவே சர்வதேச கிரிக்கெட் பேரவை விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நியமிக்கப்பட்ட இங்கிலாந்து பிரஜையான சிரேஷ்ட சட்டத்தரணி மைக்கல் புளோக்கினால் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக குறித்த மூவரும் அடையாளம் காணப்படும் பட்சத்தில், தென் ஆபிரிக்கா அணியுடனான எதிர்வரும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க இவர்களுக்கு தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

0
Shares