கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் எப்படி இருக்கிறது ?- திரை விமர்சனம்

இயக்குனர் பாண்டிராஜின் ’கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டு ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது , இத்திரைப்படம் விவசாயத்தை பற்றியும் குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பற்றியும் கூறும் கதைக்களத்தை கொண்டுள்ளது.

நாயகன் காா்த்தி கிராமப்புறத்து கதைக்கேற்ற முகத்தை கொண்டிருப்பவர் . அதனால் தான் பருத்தி வீரனுக்கும், கொம்பனுக்கும் கார்த்தி மிகவும் பொருத்தமாக இருந்தார் . நகைச்சுவை , சண்டை , காதல், திரில்லர் என எல்லா கதைக்களங்களிலும் ஒரு சுற்று வந்துள்ளார். இருப்பினும் நமது பக்கத்து வீட்டு பையனாக நடிக்கும் நேர்த்திக்காகவே நிச்சயமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைப் பார்க்கலாம்.

கிராமத்து கூட்டுக் குடும்ப கதையை மட்டுமல்லாமல் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் சிறப்பாக உள்ளது.

கூட்டுக் குடும்பம், விவசாயம், பழிவாங்கல் , அன்பு என்று கலவையாக செல்லும் கதையை மனதை உருக்கும் விதமாக இயக்குனர் பாண்டிராஜ் அமைத்துள்ளார்.

இப்படத்தில் கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், விஜி சந்திரசேகர், அர்தனா பினு, பொன்வண்ணன், சூரி, சௌந்திரராஜா, மௌனிகா, யுவராணி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது.

ஒரு கதையில் ஏராளமான நட்சத்திரங்கள் இருந்தால், அனைவருக்கும் முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அரிதான விடயமாகும் . ஆனாலும் அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ் .இதனால் படம் முழுவதும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த படத்தில் வரும் கிராமத்தில் இரண்டு பெரிய தலைவர்கள் இருக்கின்றனர்.அதில் ஒருவர் சத்யராஜ், மற்றொருவர் சௌந்திரராஜா. கதையின்படி கார்த்தியின் தந்தையாக சத்யராஜ் மற்றும் அவரது சகோதரிகளாக ஐந்து பேர் என பெரிய கூட்டுக் குடும்பமாக இருக்கின்றனர்.

கிராமத்தில் திருவிழா நேரத்தில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுகிறது. இதில் கார்த்தியும், சௌந்திரராஜா கலந்து கொள்கின்றனர். இதில் கார்த்தி வெற்றி பெறுகிறார்.

இதையடுத்து கார்த்தியை பழிவாங்க துடிக்கும் சௌந்திரராஜா,அவருடைய குடும்பத்தினரை பழிவாங்கும் வகையில் அவர்களுடைய தொழிலான விவசாயத்தை அழிப்பது என்று முடிவு செய்கிறார்.

இந்த பழிவாங்கள் பிரச்சனையில் யார் வெல்கிறார். யார் தோற்றார் என்பது தான் மீதி படம் .

கிராமத்து கெட்டப்பில் முறுக்கு மீசை, வேட்டி சட்டையுடன் வலம் வரும் கார்த்தி சண்டை காட்சிகளில் அதிரடியாக தோன்றியுள்ளார்.

விவசாயம், சண்டைக்காட்சி, பாசம் என படம் பரபரப்பாக செல்வதுடன், சூரி, கார்த்தியின் நகைச்சுவையும் சிரிப்பு மழையை பொழிகிறது.

கிரமப்புற படம் என்றாலே தற்போது இமான் இசை தான் என்ற அளவுக்கு மாறிவிட்டது.

ஆகமொத்தத்தில் இந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படமானது நகைச்சுவை கலந்த குடும்ப கதையாக இருப்பதால் கலகலப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய படமாக அமைந்துள்ளது.

0
Shares